ஜென்சென் ஹுவாங், ஆலிஸ் ஹுவாங் இடையிலான ரகசிய உறவைப் பயன்படுத்தி என்விடியா நிறுவனத்திடமிருந்து ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சிப்களை சீனா வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கான சிப்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக அமெரிக்காவின் என்விடியா உள்ளது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு செய்தியில், என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங்குக்கும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஆலிஸ் ஹுவாங்குடன் தனக்கு இருந்த ரகசிய உறவை ஜென்சென் ஹுவாங் இப்போது வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்காக தனது மனைவி லோரி ஹுவாங் மற்றும் குழந்தைகளிடமும் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 8-ம் தேதி தனது நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘எனது செயல் என் மனைவி மற்றும் குழந்தைகளை புண்படுத்தி இருக்கும். இதற்காக மிகவும் வருந்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளி என்பதும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட மெகாஸ்பீடு நிறுவனம் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சகத்துடன் அவர் இணைந்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. சீனாவுக்கு சில சிப்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், மெகாஸ் பீடு நிறுவனம் மூலம் என்விடியா சிப்கள் சீனாவுக்கு சென்றுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக ஆலிஸ் சீன உளவாளியாக செயல்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சிப்களை என்விடியா நிறுவனத்திடம் இருந்து சீன நிறுவனங்கள் பெற்றுள்ளதாக ‘தி இன்ஃபர்மேஷன்’ செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தடை செய்யப்பட்ட 2.4 லட்சம் சிப்கள் (ஹெச்100, ஹெச்200) சீனாவுக்கு கொண்டுசெல்ல ஆலிஸ் உதவியதாகக் கூறப்படுகிறது. ஆலிஸ், தனது சகோதரி மற்றும் கணவருடன் இணைந்து, என்விடியா சிப்களைப் பெறுவதற்காக சீனா மற்றும் சிங்கப்பூர் முழுவதும் நிறுவனங்களின் வலையமைப்பை உருவாக்கியதும் தெரியவந்துள்ளது.
குடும்பத்தினருக்கு தெரியும்?
தைவானில் உள்ள ஒரு உணவகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், ஜென்சென் மகள் மேடிசன் ஹுவாங், தனது தந்தை மற்றும் அலிஸைப் புகைப்படம் எடுப்பது பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில், ஜென்சென் அலிஸை அணைத்தபடி அவரது கன்னத்தில்
முத்தமிட முயல்வது பதிவாகி உள்ளது. அப்போது மேடிசனின் வருங்கால கணவரான நிக்கோ காப்ரேஸும் அவர்களுடன் அந்த உணவகத்தில் உடனிருந்தார் என தைவான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் ஆலிஸ் ஹுவாங்குடனான ஜென்சென் ஹுவாங் உறவு பற்றி அவரது குடும்பத்தினருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது.
ஆலிஸுடன் மேடிசன் ஹுவாங் பழகிய விதமும், அந்த ஜோடியைப் புகைப்படம் எடுத்த எளிமையையும் சுட்டிக்காட்டி, இந்த உறவு குடும்பத்தினருக்குள் தெரிந்த ரகசியம்தானா என்று சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.எக்ஸ் வலைதள பயனர் ஒருவர் வெளியிட்ட பதிவில், “எளிய முறையில் கூறுவதானால், இந்த விவகாரம் ஏற்கெனவே அரைகுறை ரகசியமாக இருந்தது. அவரது மனைவிக்கும் தெரிந்திருக்க வேண்டும். அமெரிக்க அரசு தனது பிடியில் வைத்திருப்பதால் இப்போது அந்த உறவை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஜென்சென் ஹுவாங்குக்கு ஏற்பட்டிருக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.














