நிலத்தை கையகப்படுத்தியற்கான இழப்பீட்டுத் தொகையை தராததால் சீன அரசு அலுவலகத்துக்குள் பொக்லைன் இயந்திரத்துடன் புகுந்த நபர் அங்கிருந்த கட்டிடங்களை இடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், சீனாவின் ஷான்சி மாகாணம் சியான நகரின் சிக்சியான் பகுதியில் அமைந்துள்ள பெங்டோங் புதிய நகர அரசு சேவை மையத்துக்குள், 47 வயது நபர் பொக்லைன் இயந்திரத்தை ஓட்டிச் சென்று நுழைவு வாயில் மற்றும் அலுவலகக் கட்டிடங்களை சேதப்படுத்தினார்.
குறிப்பாக, அரசு சேவை மையத்தின் கண்ணாடி வாசல்கள், முகப்புப் பலகை, படிக்கட்டுகள் என 6 இடங்களில் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு தகர்க்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஒருமணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பாதுகாப்பு கருதி உடனடியாக ஊழியர்கள், பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பொக்லைனை ஓட்டிச்சென்று கட்டிடத்துக்கு சேதம் ஏற்படுத்தியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.














