முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பினால் மரண தண்டனையை எதிர்கொள்வார் என்று அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் முகமது அமினுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதன் காரணமாக அன்றைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். வரும் டிசம்பரில் அவர் வங்கதேசம் திரும்ப திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
ஆனால் அவருக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க முடியாது, வங்கதேச நீதி மன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவரை, இந்திய அரசு முறைப்படி ஒப்படைக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் வங்கதேச அட்டர்னி ஜெனரல் முகமது அமினுல் இஸ்லாம், தனியார் செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில், “வங்கதேச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஹசீனாவுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க முடியாது.
குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின்படி தன்னை வங்கதேச அரசிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசிடம் அவர் முறையிட வேண்டும். இந்த நடைமுறையின் மூலம் மட்டுமே அவர் வங்கதேசத்துக்கு திரும்ப முடியும். வங்கதேசத்துக்கு ஷேக் ஹசீனா திரும்பினால் அவர் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்” என்றார்.














