அருமனை அருகே மேல்புறம் சந்திப்பில் நகைக்கடையில் கடந்த 15ஆம் தேதி இரவு திருட்டு நடந்ததாக கடை உரிமையாளர் பத்மநாபன் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் அருமனை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று (26-ம் தேதி) இரவு மேல்புறம் அருகே செம்மங்காலையில் அருமனை சப் இன்ஸ்பெக்டர் சுஜின் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரித்ததில் சம்பந்தப்பட்ட நகைக்கடையின் மேல்மாடியில் குடியிருக்கும் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் (22) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரவீன் நகைக்கடையில் திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த நகை மற்றும் வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரவீன் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.