பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு: சிறப்பு நிதியுதவி வழங்க கோரிக்கை

0
22

பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அவர் நிதியுதவி கோரினார்.

ஆந்திராவில் ஆட்சி நடத்தும் தெலுங்கு தேசம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சூழலில் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஆந்திராவின் பல்வேறு திட்டங்களுக்கு அவர் நிதியுதியை கோரினார்.

இதுகுறித்து சந்திரபாபு நாயுடு சமுக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: போலவரம், அமராவதி திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு வழங்கி உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தேன்.

ஆந்திராவில் கடந்த ஆட்சிக் காலத்தில் 94 மத்திய திட்டங்களுக்கான நிதி வேறு திட்டங்களுக்கு திருப்பிவிடப்பட்டது. மத்திய அரசின் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவது குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன். நிதி சார்ந்த விவகாரங்களில் ஆந்திர அரசு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அந்த சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு சிறப்பு நிதியுதவியை வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

வரும் 2047-ம் ஆண்டுக்குள் ஆந்திராவை அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக மாற்றும் ஸ்வர்ண ஆந்திரா 2047 திட்டம் குறித்த விரிவான அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தேன். ஆந்திராவின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தேன். அவரது வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஆர்சிலர் மிட்டல் உருக்கு ஆலையை நிறுவுவது குறித்தும் பிரதமர் மோடியுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு விரிவான ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உருக்கு துறை அமைச்சர் குமாரசாமி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது ஆந்திராவின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு மத்திய அமைச்சர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here