ராஜஸ்தானில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 19 ஆக உயர்ந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 20-ம் தேதி எல்பிஜி டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதியது. இதில் டேங்கரின் மூடி திறந்து எரிவாயு காற்றில் பரவியதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததில் பலர் தீக்காயம் அடைந்தனர்.
சம்பவ நாளில் 11 பேரும் அதன் பிறகு 4 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் 3 பேர் இறந்தனர். இந்நிலையில் 60 சதவீத தீக்காயங்களுடன் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த லாலாராம் (28) என்பவர் நேற்று உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.
மகிந்திரா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் காவலாளியாக லாலாராம் பணியாற்றி வந்தார். மோட்டார் பைக்கில் வேலைக்கு சென்றபோது விபத்தில் சிக்கினார். ஜெய்ப்பூர் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் தற்போது 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.