தனிப்படை போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி, தனது அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரிடம், நகை திருட்டு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர் நவீன்குமார் ஆகியோரை போலீஸார் தாக்கியுள்ளனர். பின்னர் நவீன்குமாரை விட்டுவிட்டு, அஜித்குமாரை டிஎஸ்பி-யின் தனிப்படை போலீஸார் தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக தனிப்படை போலீஸார் ராஜா, பிரபு, கண்ணன்,ஆனந்த், சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி, ஜூலை 8-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
அதன்படி, மாவட்ட நீதிபதி கடந்த 2-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை 4 நாட்கள் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் விசாரணை நடத்தினார். ஏடிஎஸ்பி சுகுமாறன், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், பிரேதப் பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல், அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார், போலீஸார் தாக்கிய காட்சிகளை மறைந்திருந்து செல்போனில் பதிவு செய்த கோயில் ஊழியர் சக்தீஸ்வரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். பின்னர் திருப்புவனம் காவல் நிலையம், கோயில் அலுவலகத்தின் பின்புறமுள்ள கோசாலை ஆகிய இடங்களுக்கும் சென்று நீதிபதி ஆய்வு செய்தார்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தனது விசாரணை அறிக்கையை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் நாளை தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை: கடந்த ஜூன் 28-ம் தேதி போலீஸார் தாக்கியதில் தனக்கு உடல், கால்களில் வலி உள்ளதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், உடல்நிலை பாதித்துள்ள அவரை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்குசிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைப் பின்னர் நவீன் குமார் நேற்று மாலையில் வீடு திரும்பினார்.