தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மாவட்டத் தலைவர் புலியூர் பாலசுப்ரமணியன் தலைமையில் நாகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நாகை மாவட்டத்தில் 2024-ல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதி மூலம் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
கருணாநிதி பிறந்த திருக்குவளையில் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கிறது. நெல் உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படவில்லை. 2021 திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஒன்றியம்தோறும் மூடப்பட்ட கிடங்குகள் அமைக்காததால், நெல்மணிகள் வீணாகின்றன.
கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்று கூறுவதும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு என சொல்வதும் உண்மைக்கு மாறானது.
கடன் தள்ளுபடி, ஊக்க நிதி போன்றவற்றை மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து ஈடு செய்கிறது. இதை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது. விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையைக் கூட பெற்றுத்தர திமுக அரசு முன்வருவதில்லை.
2017-2021 வரையிலான அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீடாக ரூ.13 ஆயிரம் கோடி பெற்றுத் தரப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி காலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வெறும் ரூ.3 ஆயிரம் கோடி மட்டுமே இழப்பீடாக பெற்றுக் கொடுத்துள்ளனர்.
தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் காப்பீடு செய்வதற்கு திமுக அரசு அனுமதி மறுக்கிறது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அனுமதிக்க விரும்புகிறது.
விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை திட்டங்களாக நிறைவேற்ற திமுக அரசு முற்படுவதால் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பது என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வேதை கருணைநாதன், நாகை ஒன்றிய தலைவர் வேலாயுதம், திருமருகல் ஒன்றிய செயலாளர் பரமசிவம், தலைவர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.














