தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் வலியுறுத்தியுள்ளனர்.
அன்புமணி: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனியார் பேருந்துகளுக்கு கி.மீ.க்கு ரூ.51.25 வீதம் வாடகையாக வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மிகவும் ஆபத்தான இந்த முயற்சி தனியார் மயத்துக்கு வழிவகுக்கும். நெரிசல் காலங்களில் மக்களின் வசதிக்காக என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தனியார் பேருந்துகளை அரசு இயக்குவதை ஏற்க முடியாது.
இதற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்களும், விளக்கங்களும் ஏற்க முடியாதவை. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 8,182 புதிய பேருந்துகளை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கடந்த 3.5 ஆண்டுகளில் 1,088 புதியபேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. அதாவது காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கையில் 4-ல் ஒரு பங்கு அளவுக்குக் கூட புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. அரசு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், கணிசமான அளவில் நிதியை ஒதுக்கி தேவையான அளவுக்கு புதிய பேருந்துகளை வாங்கவும், புதியபணியாளர்களையும் போக்குவரத்து கழகங்களில் நியமிக்கவும் அரசு முயற்சிக்க வேண்டும்.
டிடிவி தினகரன்: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்தஊர்களுக்கு செல்லும் பயணிகளின் தேவைக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கபோக்குவரத்துத்துறை முடிவுசெய்திருப்பது அப்பட்டமானதொழிலாளர் விரோதப் போக்காகும். தனியார் நிறுவனங்களின் மூலம் ஆட்சேர்ப்பு, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமனம் வரிசையில் தற்போது தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது. இவையாவும் போக்குவரத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியே. எனவே, பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் போக்கை கைவிட்டு, புதிய பேருந்துகளை வாங்கி இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.