சென்னை: ஆதிதிராவிடர் ஊராட்சித் தலைவர்களை சந்திக்க மறுத்த விவகாரம் தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அக்.30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் சந்திக்க மறுத்தது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி இருந்தார்.
இதுதொடர்பான செய்தி நாளிதழ்களில் கடந்த திங்கள் கிழமை வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் மீது தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் சந்திக்க மறுத்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்திருப்பதாக கடந்த திங்கள்கிழமை நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து இரு தருப்பினருக்கும் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர், நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவர் சிவராசு ஆகியோர் எழுத்துப்பூர்வமான பதிலை அக்.30-ம் தேதிக்குள் ஆணையத்துக்கு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.