முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஓசூரில் 2,000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக, 3 ஆயிரம் ஏக்கர் காலி இடம் உள்ள சோமனஹள்ளி என்ற பகுதியை தேர்வு செய்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.
இரு விமான நிலையங்களுக்கு இடையில் 50 கி.மீ.க்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால், முதல்வர் அறிவித்த ஒசூர் சர்வதேச விமான நிலையம் மற்றும் கர்நாடகாவின் சோமனஹள்ளிக்கும் இடையில் 47 கி.மீ. மட்டுமே உள்ளது.
ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் பெங்களூருக்கான முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்பதற்காக கர்நாடக அரசு இந்த நடவடிக்கை எடுக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எப்படி இருந்தாலும், ஒசூர் சர்வதேச விமான நிலையம் அமைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.