சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்த அவர்களுக்கு ஆன்லைனில் சிறப்புசட்டக்கல்வி அளிக்கும் புதிய திட்டத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், சுரானா அண்ட் சுரானா சர்வதேச சட்ட மையத்துடன் இணைந்து சீர்மிகுசிறப்பு சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு சட்டக்கல்வி தொடர்பான ஆன்லைன் சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்க உள்ளது. இந்த புதிய கல்வித் திட்டத்தின் தொடக்கவிழா சென்னை தரமணியில் உள்ள சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆன்லைன் கல்வி திட்டத்தை தொடங்கிவைத்தார்.அவர் பேசும்போது கூறியதாவது: வழக்கறிஞர் பணி என்பதுவெறும் சட்டப்புத்தக அறிவு மட்டும்சம்பந்தப்பட்டதாக இருக்க முடியாது. நீதிமன்ற அனுபவ அறிவுஅவசியம். நான் சட்டப்படிப்பை முடித்துவிட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கியபோதுவழக்காடுவதற்கு மிகவும் பதற்றமாக இருந்தது. காரணம் போதிய நீதிமன்ற அனுபவ அறிவு இல்லை.நீச்சல் தொடர்பான ஏராளமான புத்தகங்களை படித்துவிட்டு யாரும் நீச்சல் அடித்துவிட முடியாது. நீச்சல் அடித்து பழக வேண்டும். நடைமுறைப்பயிற்சி வேண்டும். அதேபோல்தான் வழக்கறிஞர் பணியும். வழக்கறிஞர்களுக்கு தகவல் தொடர்புத்திறன், வாதாடும் திறன் மிகவும் முக்கியம். இந்த திறமைகள் அனுபவம் வாயிலாகத்தான் வரும். எந்த புத்தகமும் அவற்றை சொல்லித்தராது. அந்த வகையில், சட்டக்கல்லூரி மாணவர்களின் சட்டத்திறனையும், தகவல்தொடர்புத்திறனையும் மேம்படுத்தும் வகையில் பல்கலைக்கழகம் – சட்ட நிறுவனம் கூட்டு முயற்சி திட்டத்தின் மூலம் இந்த ஆன்லைன் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தொடர் கல்வி திட்டத்தில் முதல்கட்டமாக இணைய சட்டம்குறித்து கற்பிக்கப்பட உள்ளது. நாம் அனைவருமே தெரிந்தோ, தெரியாமலோ, இணையவழியில் பயணிக்கிறோம். செல்போனை பயன்படுத்தினாலே இணையவழியில் உள்ளோம் என்றுதான் அர்த்தம். இணையவழியில் உலகின்ஒரு கோடியில் இருந்துகொண்டு இன்னொரு கோடியில் குற்றச்செயல்களில் ஈடுபட முடியும். இணையவழி குற்றங்களுக்கு எல்லை வரையறை கிடையாது. நமக்கு முன்பின் தெரியாதநபர்கள்கூட நமக்கு எதிரான குற்றச்செயல்களை இணையவழியில் செய்ய முடியும். இணையவழியில் பாதுகாப்பு என்பதே இல்லை. இவ்வாறு நீதிபதி ராமசுப்பிரமணியன் கூறினார்.
சுரானா அண்ட் சுரானா சர்வதேச சட்ட மையத்தின் தலைமைச் செயல்அலுவலர் வினோத் சுரானா ஆன்லைன் சான்றிதழ் படிப்பு குறித்துஅறிமுகவுரை ஆற்றினார். விழாவில், சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரி டீன் வி.பாலாஜி, மாதிரி நீதிமன்ற ஆலோசகர் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம், ரேஷ்மி சுரானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.