காவிரியில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 20-ம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் அதன் தலைவர் வினீத் குப்தா, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு
2 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தார். இதனை கர்நாடக அரசு ஏற்க மறுத்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 62-வது கூட்டம், அதன் புதிய தலைவர் பியூஷ் சிங் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
போதிய மழை இல்லை
அப்போது, கர்நாடக அரசு தரப்பில், “போதிய மழை இல்லாததால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளிலும் குறைந்த அளவில் நீர் இருப்பில் உள்ளது. எனவே, அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட இயலாது” என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசு தரப்பில், “வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை காலத்தில் நீர் பங்கீடு செய்ய வேண்டிய முறையை மாற்றி, தமிழகத்துக்கு அதிக அளவில் நீரை திறக்க உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
இறுதியில், ஆணையத்தின் தலைவர் பியூஷ் சிங், “காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் நீரைத் திறந்துவிட வேண்டும்” என உத்தரவிட்டார்.














