கடந்த 2021-ம் ஆண்டு கேரளாவின் விழிஞ்ஞம் கடற்கரைக்கு அருகே இலங்கை படகில் 300 கிலோவுக்கு அதிகமான ஹெராயின் போதைப்பொருள், 5 ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் 1,000 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பான வழக்கில் இலங்கையைச் சேர்ந்த முகமது அஸ்மினை 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதற்காக, சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தலுக்கு அவர் உடந்தையாக இருந்ததாக என்ஐஏ குற்றம்சாட்டியது.
இதனிடையே, சிறையில் இருந்த முகமது அஸ்மின், இந்த சதித் திட்டம் மற்றும் இதில் தொடர்புடைய சக குற்றவாளிகள் குறித்த முழுமையான தகவல்களை தாமாக முன்வந்து வாக்குமூலமாக அளித்தார். மேலும், இவ்வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறினார். இதனை ஏற்றுக்கொண்ட என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், கடந்த 2023-ம் ஆண்டு அவருக்கு மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், நீண்ட காலமாக சிறையில் இருந்து வரும் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அஸ்மின் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜா விஜயராகவன் வி. மற்றும் கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தால் ஏற்கெனவே மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அரசுத் தரப்பு சாட்சியாக மாறியுள்ளதால் அஸ்மினுக்கு ஏற்படக்கூடிய உயிர் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்றம், அவரை ‘கேரள சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் கொண்டு வந்து உரிய பாதுகாப்பு வழங்குமாறு மாநில உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. தடையில்லை அதேநேரம், சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தொடர்பான குடியேற்றத் துறை நடவடிக்கைகளுக்கு இந்த ஜாமீன் உத்தரவு தடையாக இருக்காது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.











