கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு நிர்ணய சபை நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. நவீன அரசியலமைப்பை உருவாக்கும்போது, அது இந்தியாவின் செழுமையான மரபுகள், நாகரிக அறிவாற்றல் ஆகியவற்றிலிருந்து விரிவாக எடுத்துக்கொண்டது.
டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், அரசியலமைப்பு நிர்ணய சபையின் அனைத்து உறுப்பினர்களையும் இந்நாளில் நினைவுகூர்கிறோம். குடிமக்களின், குறிப்பாக இளைஞர்களின் ஒருங்கிணைந்த உணர்வில் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை ஆழமாகப் பதியச் செய்யும் நோக்கில், பத்தாண்டுகளுக்கு முன்பே நவம்பர் 26-ம் தேதியை அரசியலமைப்பு தினமாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது.
கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கைப் பயணத்தில் அரசியலமைப்பு பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்கிறது. ஒருவர் பிறக்கும் சூழ்நிலைகள் அவரது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை என்பதை அரசியலமைப்பு உறுதி செய்கிறது.
சமூக, பொருளாதார நீதியை நிலைநாட்டும் அதன் தொலைநோக்குப் பார்வை, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா திட்டம், ஆயுஷ்மான் பாரத், முத்ரா திட்டம், பிரதமரின் ஸ்வநிதி திட்டம், யுபிஐ போன்ற முன்முயற்சிகள் மூலம் நனவாகி வருகிறது. உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் ஏறத்தாழ 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக, குடிமக்களின் கடமைகளுக்கு நாம் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்களே அதனைப் பலவீனப்படுத்த முயன்ற சந்தர்ப்பங்களும் நமது வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. பல தசாப்தங்களாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாகப் பழங்குடியினர் வாழும் பகுதிகளில், துப்பாக்கி பலத்தை பயன்படுத்தி, அரசியலமைப்பு மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை நக்சலைட்டுகள் மறுத்து வந்தனர். இந்த ஆண்டு நக்சலிசம் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டிருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.
இதன் மூலம் மிகவும் ஏழ்மையான மக்களும் அச்சமின்றி தங்களது அரசியலமைப்பு உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தைத் திசைதிருப்பத் தொடர்ந்து முயற்சிக்கும் ‘நக்சல் சிந்தனை’ கொண்டவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். நமது அரசியலமைப்பின் பயணத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பெண்களை அங்கீகரிக்காமல், அதன் வரலாறு முழுமையடையாது.
ஆனால், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதை, ஒரு குறிப்பிட்ட எதிர்க்கட்சியினர் தடுத்தனர். இது, அரசியலமைப்பு மாண்புகள் மீதான அவர்களது அலட்சியப் போக்கை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகளிர் சக்திக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வதிலிருந்து எந்தவொரு சக்தியாலும் எங்களைத் தடுக்க முடியாது.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது முயற்சிகளில், ‘தேசத்துக்கு முன்னுரிமை’ என்ற சிந்தனையையும், செயல்பாடுகளில் கடமை உணர்வையும் வழிகாட்டும் கொள்கைகளாகவும், இந்திய அரசியலமைப்பை நமது வலிமையின் ஆதாரமாகவும் கொண்டு செயல்பட்டால், வருங்காலத் தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை நம்மால் உறுதி செய்ய முடியும்.














