ஒரு நாட்டின் அதிபரையே பதவியிழக்கச் செய்த வங்கி மோசடி – இது பராகுவே கதை!

0
38

தென் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு பராகுவே. பிரேசில், பொலிவியா, அர்ஜென்டினா போன்றவை இதன் எல்லை நாடுகள். பராகுவேவின் மொத்த மக்கள் தொகையே 71 லட்சம் தான். அப்படியிருக்க அந்த நாடு கொந்தளித்துக் கொண்டிருப்பதன், அந்நாட்டின் அதிபர் சான்டியாகோ பெனா பதவி இழந்ததன் பின்னணியில் இருப்பது ஒரு வங்கி மோசடி என்று சொன்னால், அது வியக்கவைக்கிறது அல்லவா?

ஆம், அது உண்மைதான். அதுபற்றிதான் சற்று தெளிவாகவும் சுருக்கமாகவும் பார்ப்போம்.

அரசியல் நெருக்கடியான நிதி நெருக்கடி…

2026 நவம்பர் 3-ம் தேதி தான் எல்லாம் தொடங்கியது எனலாம். அன்று வழக்கம்போல், பராகுவே மக்கள் தங்கள் Ueno (யூனோ) வங்கிச் செயலியை பயன்படுத்த முயன்றபோது பணப் பரிவர்த்தனைகள் செய்ய முடியவில்லை. ஏதோ தொழில்நுட்பக் கோளாறு, சில நிமிடங்களில் சரியாகும் என அவர்கள் நினைக்கும்போது நாட்டின் பெரும்பாலான மக்களுக்கும் இதே நிலை தான் என்பது தெரியவந்தது. பணப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் எதுவும் வாங்கவும், விற்கவும் முடியாமல் மிகப் பெரிய முடக்கம் ஏற்பட்டது.

அடுத்த ஒரு சில நாட்களிலேயே, இந்த நிதி நெருக்கடி ஒரு பெரிய அரசியல் நெருக்கடியாக மாறியது.

பராகுவே நாட்டின் சாதாரண மக்களுக்கும் வங்கிச் சேவையை கொண்டு சேர்த்தது என்று புகழப்பட்ட Ueno வங்கி, அந்நாட்டின் அரசியல் தலைவர்களுடனும், அரசு நிறுவனங்களுடனும் இருந்த மிக நெருக்கமான உறவுகள் மூலமாகவே வளர்ந்தது. அதனால் தான் வங்கியால் உருவான நிதி நெருக்கடி அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுத்துள்ளது.

அரசியல் நெருக்கடி வலுக்கவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் சான்டியாகோ பெனா அறிவித்தார். ஒருவேளை அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டிருந்தால், அவருக்கு சட்டப் பாதுகாப்பும், சிறப்பு சலுகைகளும் கிடைத்திருக்கும்.

ஆனால், அதற்குப் பதிலாக, மக்களவை ஒருமனதாக அவரை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தது. நிதி நெருக்கடிக்கு அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியது. அதனைத் தொடர்ந்து மேலவையும் அவரைப் பதவியில் இருந்து நீக்க வாக்களித்தது.

சான்டியாகோ பெனாவை தகுதி நீக்கம் செய்யும் வாக்கெடுப்பு நடந்த சிறிது நேரத்திலேயே, துணை அதிபர் பெட்ரோ அலியானா அதிபராகப் பதவியேற்றார். ஆக அதிபர் பதவியிழந்தாலும் கூட அவர் சார்ந்த கொலராடோ கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்தக் கட்சி பழமைவாதக் கொள்கைகள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சான்டியாகோ பெனா?

சான்டியாகோ பெனா ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவாளரும் கூட. இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெள்ளை மாளிகை அவரை மியாமியில் நடந்த ஒரு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அழைத்திருந்தது. அதில், ட்ரம்ப்புக்கு நெருக்கமான மற்ற வலதுசாரி லத்தீன் அமெரிக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஆனால், யூனோ வங்கி முடக்கத்துக்குப் பின்னர் பெனா மீது தற்போது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி, தனக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் பெனா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இப்படியான திடீர் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிலைமை எப்படி இவ்வளவு விரைவாக கட்டுப்பாட்டை மீறிச் சென்றது, இந்தக் குழப்பம் எப்படித் தீர்க்கப்படும் என்று பலரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

யூனோ வங்கியின் வளர்ச்சி!

இத்தனைக்கும் காரணமான யூனோ வங்கியின் வளர்ச்சி பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். கடந்த 2021-ம் ஆண்டு ஒரு டிஜிட்டல் வங்கியாக தொடங்கப்பட்டதுதான் யூனோ (Ueno), வங்கி. ஆனால் அதன் மொபைல் சேவைகள், கேஷ்-பேக் சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இப்படியான ஏகோபித்த ஆதரவுடன் 70+ கிளைகளையும், 700+ ஏடிஎம்-களையும் யூனோ வங்கி ஏற்படுத்தியது.

யூனா வங்கி, கிராமப்புற மக்களுக்கு பயனுள்ள சேவைகளை கொண்டு சேர்த்து கவனம் பெற்றது. குறிப்பாக, குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கும் கிரெடிட் கார்டு வசதியை Ueno விரிவுபடுத்தியது. இதற்கு முன்பு இருந்த கட்டுப்பாடான வங்கி நடைமுறைகளுடன் ஒப்பிடும்போது, இது ஒரு புதுமையான மாற்றமாகவே இருந்தது. Ueno வளர வளர, பராகுவே அதிக முதலீட்டாளர்களை ஈர்த்தது. குறைந்த வரிகள், பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வணிகத்திற்கு சாதகமான கொள்கைகளால் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக மூடீஸ் பொருளாதார ஆய்வு நிறுவனம் கூட பராகுவேவை பாராட்டியது.

வேகமான வளர்ச்சியை ஒட்டி, “தென் அமெரிக்காவின் துபாய்” என்று பராகுவே பாராட்டுகளைப் பெற்றது.

ஏற்கெனவே, பராகுவே அதிபர் பெனா, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரந்த பிராந்திய கனவுக்கு ஆதரவாக இருந்தது இடதுசாரிகளால் விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தது. ஆனால், அதையெல்லாம் அரசியல் ரீதியான விமர்சனங்களால் பெனா எதிர்கொண்டு வந்தார். பராகுவே வளர்ச்சிக்கு யூனோ வங்கியின் செயல்பாடுகள் உறுதுணையாக இருப்பதாகக் கூறியதோடு, தென் அமெரிக்கப் பிராந்தியத்தின் பிற பகுதிகள் இடதுசாரி அரசாங்கங்களின் தவறான நிர்வாகத்தால் ஏற்றம் காணவில்லை என்று பெனாவின் ஆதரவாளர்கள் அவருக்காக முழங்கினர்.

வங்கி நெருக்கடி தொடங்கியது எப்படி?

ஒரு சிறிய டிஜிட்டல் ஃபின்டெக் நிறுவனமாக தொடங்கி, வேகமாக வளர்ந்து நடுத்தர அளவிலான வங்கியாக மாறிய யூனோ வங்கி, அதனிடம் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய நிதி நிலைத்தன்மையை (Solvency) பூர்த்தி செய்யத் தவறியது. Solvency என்பது, ஒரு வங்கிக்கு நஷ்டங்களை தாங்கிக் கொள்ள போதுமான மூலதனம் (Capital) இருக்கிறதா என்பதை அளவிடுவது ஆகும். அந்த சக்தியை யூனோ வங்கி இழந்ததை பராகுவே மத்திய வங்கி கண்டுபிடித்தது.

மேலும், யூனோ வங்கி தன்னை கட்டுப்படுத்தும் குழுவான குரூப்போ வாஸ்குவெஸ்-உடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்ததையும் மத்திய வங்கி கண்டுபிடித்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், 2025 மார்ச் மாதம் வரை, அதிபர் பெனாவே அந்தக் குழுவில் ஒரு பங்குதாரராக இருந்தார் என்பதுதான். மேலும், பெனா ஒரு சொகுசு பங்களா கட்ட மில்லியன் கணக்கில் யூனோ வங்கி கடன் கொடுத்துள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

Ueno வங்கி தற்போது கிட்டத்தட்ட 850 மில்லியன் டாலர் அளவுக்கு பொது மக்களின் பணத்தை நிர்வகித்த நிலையி,, இந்த நெருக்கடி கிட்டத்தட்ட 3 மில்லியன் வாடிக்கையாளர்களை பாதித்துள்ளது.

அடுத்தது என்ன?

பெனாவின் பதவி நீக்கத்தை பராகுவே மக்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் அவருக்குப் பதிலாக அவருடைய சொந்த துணை அதிபரே பதவிக்கு வந்திருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரின் சில பகுதிகளில், போராட்டக்காரர்கள் அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் பதவி நீக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். “அனைவரும் வெளியேறுங்கள்!” என்பதே அவர்களின் முழக்கமாக உள்ளது.

புதிய அதிபர் அலியானா, பல அரசு அமைச்சகங்களில் புதிய தலைவர்களை நியமித்துள்ளார். அவர்களில் ஒருவர் ஜார்ஜ் ஷ்ரெய்னர். Ueno வழக்கில் வழக்கறிஞர்களால் குற்றம் சாட்டப்பட்ட கார்லோஸ் கார்வாலோவுக்குப் பதிலாக, அவர் மத்திய வங்கியின் புதிய தலைவராக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Ueno வங்கியில் பணம் போட்டவர்கள் தங்கள் சேமிப்பு முழுவதையும் திரும்பப் பெறுவதே இலக்கு என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இருப்பினும், நாட்டின் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் அப்படியே உள்ளன.

நிலையான தென் அமெரிக்க பொருளாதாரம் என்ற பராகுவேவின் நற்பெயருக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்த வங்கி நெருக்கடி வேலைவாய்ப்பு சந்தை மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு உட்பட சமூகத்தின் மற்ற பகுதிகளையும் பாதிக்கக்கூடும் என்றும் அந்நாட்டில் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இத்தகையச் சூழலில் ‘தென் அமெரிக்காவின் துபாய்’ என்று புகழப்பட்ட பராகுவே, இப்போது தன் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here