உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்திய அரசு 93% வரை குறைத்துள்ளது. சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.2,700-க்கு வழங்கப்படும் புற்றுநோய் மருந்து, நோயாளிகளிடம் 10 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மருந்துகளின் விலைக்கும், நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் தொகைக்கும் இடையேயான இந்த மிகப்பெரிய விலை வித்தியாசம் குறித்து நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, புற்றுநோய் மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அவற்றுக்கான வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் 543 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆர்பி) திருத்தியமைத்துள்ளது. ஒரு சில மருந்துகளின் விலை 93% வரை குறைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட பட்டியலின்படி, சில வகை மார்பகப் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ‘பால்போசிக்லிப்’ மருந்தின் விலை ரூ.40,421 லிருந்து ரூ.2,720 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கீமோதெரபி மருந்தான ‘தியோடெபா’வின் விலை, ஒரு குப்பிக்கு சுமார் ரூ.80,072-லிருந்து ரூ.7,150 ஆகக் குறைந்துள்ளது. பல்வேறு புற்றுநோய்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘டசாடினிப்’, ‘லென்வாடினிப்’, ‘அபிராடெரோன்’ மற்றும் ‘ஓலபாரிப்’ ஆகிய மருந்துகளின் விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், 21-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் மற்றும் ‘பெம்ப்ரோலிஸுமாப்’ என்ற முக்கிய மூலப்பொருளைக் கொண்ட ‘கீட்ரூடா’வின் விலை ரூ.2,16,500 என்ற அளவிலேயே நீடிக்கிறது. மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ‘ரிபோசிக்லிப்’ (கிரிக்ஸானா) ரூ.24,435 என்ற விலையில் மாற்றமில்லை.














