கர்நாடக மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த ஜூன் 30ம் தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான விண்ணப்பம் வழங்கினர்.
இந்த படிவங்களை வாக்காளர்கள் நிரப்பி இறந்தவர்கள், இடமாறியவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 1.08 கோடி பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தன.
இதற்கு ஆட்சேபனைகளை தெரிவிக்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து 129 நாட்களாக நடந்து வந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி மொத்தம் 99.32 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.54 கோடியில் இருந்து 4.55 கோடியாக சரிந்துள்ளது. இதில் 2.29 கோடி பெண் வாக்காளர்களும், 2.25 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளனர்.














