மத்திய அரசு உத்தரவின் பேரில் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் பதிவுகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்.
அதேநேரம், சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவதால் மக்களின் கேள்விகள் மறைந்துவிடாது என்றும், இளைஞர் வேலைவாய்ப்பின்மை, ஆட்சி நிர்வாகக் கோளாறுகள் மற்றும் பொது உள் கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகளுக்குத் தணிக்கை ஒருபோதும் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்துக் கேள்வி எழுப்பும் இன்ஸ்டாகிராம் கணக்குகளைக் கட்டுப்படுத்துமாறு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A-ன் கீழ் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய கணக்கு முடக்கங்கள் குறித்து செயற்பாட்டாளர்களும் அரசியல் அமைப்புகளும் கடும் கவலை தெரிவித்துள்ளன.
இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வலியுறுத்தி ‘இவிஎம்-ஐ அகற்று, தேசத்தைக் காப்பாற்று’ என்ற முழக்கத்துடன் ‘மிஷன் சேவ் கான்ஸ்டிடியூஷன்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மெஹ்மூத் பிராச்சாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டது.














