திரை பிரபலங்களின் உருவத்தையும் குரலையும் ஏ.ஐ. மூலம் தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு முன் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர் உள்பட பல நட்சத்திரங்கள் இது போன்ற போலியான வீடியோக்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நடிகை சுனைனாவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எனது முகத்தை ஆபாசமான உள்ளடக்கத்தில் இணைத்து உருவாக்கப்பட்ட வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. அதில் என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒருவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். இது பொய்யானது, தவறானது, ஆதாரமற்றது.
இத்தகைய இழிவான செயலைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியும் அருவருப்பும் அடைகிறேன்; இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இது பாலியல் துன்புறுத்தலுக்கு இணையானது, அவதூறானது. இந்தியச் சட்டங்களின்படி இது குற்றச் செயல். இத்தகைய செயலை முற்றிலும் ஏற்றுக்கொள்ளவும் பொறுத்துக்கொள்ளவும் முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக அந்த வீடியோவை பதிவேற்றுவதை, பகிர்வதை நிறுத்த வேண்டும். இந்த உருவாக்கி வெளியிட்ட அல்லது பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.














