காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர், உள்ளூர் மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொலை

0
56

கந்தர்பால்: ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் ஒருவர், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர் என மொத்தம் 7 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கந்தர்பால் மாவட்டத்தில் சோனம்மார்க் எனுமிடத்தில் ஞாயிறு மாலை இத்தாக்குதல் நடந்துள்ளது. அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பணிபுரிய வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. அப்பகுதியை சுற்றிவளைத்துள்ள பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கிடையே பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தீவிரவாத குழு பொறுப்பேற்பு: இந்நிலையில் காஷ்மீர் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘தி ரெசிஸ்டன்ஸ் போர்ஸ்’ எனப்படும் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த அமைப்பு காஷ்மீரில் உள்ள சீக்கியர்கள், பண்டிட்டுகள், காஷ்மீரி அல்லாதோரை குறிவைத்துவருகிறது

நடந்தது என்ன? முதற்கட்டத் தகவலின் படி இந்தத் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிகிறது. தொழிலாளிகள் பணியை முடித்து மாலையில் தம் கூடாரங்களுக்கு திரும்பியிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் ஐஜி விகே பிர்தி சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் கண்டனம்: இந்தத் தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில், “சோனம்கார்க் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் மீது நடத்தப்பட்டுள்ள மோசமான, கோழைத்தனமான தாக்குதலை. அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிக முக்கியமான கட்டுமானப் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களை தீவிரவாதிகள் கொன்றிருக்கின்றனர். மேலும், இதில் 2, 3 தொழிலாளிகள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு உயிரிழந்தோரின் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இது கோழைத்தனம். இந்தக் கோரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது. பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு மோசமாக பதிலடி தருவார்கள். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here