திற்பரப்பு பகுதியில் முந்திரி ஆலை ஒன்று பல வருடங்களாக இயங்கி வந்தது. இதனை கேரளாவை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்தி வருகிறது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட முந்திரி ஆலை மற்றும் அதனோடு சேர்ந்த பகுதிகளை வங்கியில் அடமான வைத்து கடன் பெற்றுள்ளதாகவும், கடன் திரும்ப செலுத்ததால் வங்கி நிர்வாகம் ஜப்தி செய்தது. இதை ஒருவர் ஏலம் எடுத்ததாக தெரிகிறது.
நேற்று(செப்.3) ஏலம் எடுத்தவர் வேலையாட்களுடன் அங்குள்ள மரங்களை முறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் பரவியதும் தொழிலாளர்கள் அங்கு திரண்டு, தங்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய பணிக்கொடை தொகை தந்து விட்டு மரங்களை அகற்ற வேண்டும் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குலசேகரம் போலீசார் அங்கு சென்று இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்தில் வரவழைத்து, தொழிலாளர்கள் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமரசம் செய்து வைத்தனர். இதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.