குடியரசுத் தலை​வர் ஆட்​சி​யின் கீழ் மேற்கு வங்க தேர்​தல் நடத்த வேண்​டும்: சுவேந்து அதி​காரி கோரிக்கை

0
27

குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் வக்பு திருத்த சட்டத்தைக் கண்டித்து கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. நிமிரிட்டா ரயில் நிலையத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து மேற்கு வங்க பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வக்பு சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது, முர்ஷிதாபாத் மாவட்டத்தின் துலியான், ஜாங்கிபூர் மற்றும் ஷம்ஷெர்கஞ்ச் உள்ளிட்ட நகரங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் அமைதியை நிலைநாட்டவும் மாநில அரசால் முடியவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. வன்முறையால் நூற்றுக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் புலம் பெயர்ந்து மால்டா மாவட்டத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும். குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தல் தேர்தல் நடைபெற வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here