கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 62-ல் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அங்கு 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. இதில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி அதிகஇடங்களில் வெற்றி பெற்றது.
கடந்த 2017 மற்றும் 2022-ல் நடந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. வரும் 2027-ல் நடைபெற உள்ள தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.இந்த சூழலில் மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது ஏன் என்பது குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் உட்கட்சி மோதல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.குறிப்பாக, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசும்போது, “அரசைவிட அமைப்பு பெரியது. அமைப்பைவிட பெரியவர் யாரும் இல்லை” என்றார். முதல்வரை மனதில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உ.பி. பாஜக தலைவர் பூபேந்திர சவுத்ரி பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். முன்னதாக, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசினார். இதனால், கட்சி நிர்வாகிகள் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, உ.பி.யில் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் கணிசமாக உள்ளதால், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை மாநில தலைவராக நியமிப்பது குறித்து தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.