திமுக கூட்டணி சலசலத்துப் போயிருக்கிறது. வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் திருமாவளவனின் பேச்சு உள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்கப் புத்தகத்தை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் நேற்று வெளியிட்ட மத்திய அமைச்சர் முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு மத்திய அரசு செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கிறார்.
அவர் நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி ஊழல்கள் நிறைந்த ஆட்சி. பாஜக ஆட்சி ஊழலற்ற ஆட்சியாகும். நம்மால் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கை மூலம் பதிலடி தந்துள்ளோம். மணிப்பூரில் அமைதி நிலவ உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றி பெறும். திமுக கூட்டணி சலசலத்துப் போயுள்ளது. திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பாரா என்று தெரியவில்லை. இண்டியா கூட்டணி தோல்வியடையும் என்பதால் வேறு கூட்டணி செல்லலாமா என்ற தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அவரது பேச்சு உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை அதிமுக இல்லாமல் சந்தித்து, கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம். தற்போது அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளதால் பலம் பெற்றுள்ளோம். இதனால் திமுக நிர்வாகிகளுக்கு பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
புதுவையின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை, கருத்துகளை பிரதமரிடம் முதல்வர் ரங்கசாமி தெரிவித்து வருகிறார். புதுச்சேரிக்கு தேவையான நிதி, திட்டங்களை மத்திய அரசு அளித்து வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மேலிடத்தில் தெரிவித்துள்ளோம்.
திகவினர் தான் கலவரத்தை ஏற்படுத்துபவர்கள். ஆனால், பிறர் கலவரம் ஏற்படுத்துவதாக திகவினர் கூறுகின்றனர். மதுரை முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் இருந்து வரும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள். இந்த மாநாடு, திருப்பரங்குன்றத்தில் நடந்த சம்பவத்தில் வேதனையடைந்த முருக பக்தர்களுக்கு மருந்தாக அமையும். நாங்கள் மதவாத அரசியல் செய்யவில்லை. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
பேட்டியின்போது புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார், பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி மற்றும் எம்எல்ஏக்கள் வெங்கடேசன், அசோக்பாபு, ராமலிங்கம் உடனிருந்தனர்.