தேர்தல் செலவு நிதியில் ‘இன்னோவா’ கார் வாங்கி அலப்பறை | உள்குத்து உளவாளி

0
19

தென்கோடி மாவட்டத்தில் மலர் கட்சியின் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக 3 தவணைகளில் ‘தேர்தல் நிதி’ வந்ததாம். அதில் முதலில் வந்த நிதியில் பெரும் பகுதியை அந்த மாவட்டத்தின் ‘கோல்டு’ பிரமுகர் வேறுவிதமாக பை பாஸ் செய்துவிட்டாராம்.

தனது சகோதரியின் பேரனுக்காக பெங்களூருவில் மருத்துவக் கல்லூரி கட்டிக் கொண்டிருக்கிறாராம் ‘மிஸ்டர் கோல்டு’. அதன் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக வந்த நிதியில் பெரும் பகுதியை அந்தப் பக்கம் திருப்பிவிட்டாராம்.

அதேபோல் அந்த மாவட்டத்தில் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தலா 3 ‘சி’ வரைக்கும் தங்கள் செலவுக்காக ‘தனியாக’ ஒதுக்கிவைத்து விட்டார்களாம். இதில், சிவனின் குமாரரான வேட்பாளருக்கு அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. வாக்கு எண்ணிக்கைக்கு 4 நாள் முன்னதாக லேட்டஸ்ட் மாடல் இன்னோவா கார் ஒன்றை 68 லட்ச ரூபாய்க்கு வாங்கி நிறுத்தி இருக்கிறார்.

வாங்கி நிறுத்திய காரை சும்மாவே நிறுத்தி வைத்திருந்தால் எப்படி என நினைத்தவர், காலையும் மாலையும் இரண்டு வேளை பளிச் வேட்டி சட்டை சகிதம் அந்த காரில் ஏறி தொகுதியை வலம் வந்ததுடன், தேர்தலில் வென்று எம்எல்ஏ-வே ஆகிவிட்டது போல் ‘ஆக்ட்’ கொடுத்தார். இவரது ‘அட்வான்ஸ்’ அலப்பறைகளைப் பார்த்து பொதுமக்கள் மாத்திரமல்லாது போலீஸாரும் கொஞ்சம் ஜெர்க் ஆகிப் போனார்கள். தேர்தல் முடிவுகள் வெளியான போது சுமார் 2,800 வாக்குகள் வித்தியாசத்தில் ‘வெற்றிகரமாக’ தோற்றுவிட்டோம் என்று தெரிந்ததும் தான் ‘இன்னோவா வலத்தை’ நிறுத்தி இருக்கிறார்.

இந்தச் செய்தியைக் கேட்ட பிறகு தான் ’அப்பாடா’ என ‘உளைச்சலில்’ இருந்து விடுபட்டிருக்கிறார்கள் ஊர் மக்கள். இதனிடையே தேர்தல் செலவுக்காக தலைமையில் இருந்து வந்த பணம் செலவிடப்பட்ட விதம் குறித்து ஆர்எஸ்எஸ்-காரர்கள் புலன் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here