சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு

0
52

புனேயில் இருந்து 178 பயணிகளுடன் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புனேயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 178 பயணிகளுடன் நேற்று அதிகாலை சென்னையில் தரையிறங்க வந்து கொண்டிருந்தது. விமானம் அதிகாலை 1.10 மணியளவில், சென்னையில் தரையிறங்குவதற்காக படிப்படியாக பறக்கும் உயரத்தை குறைத்து தாழ்வாக பறந்தது.

கிண்டி பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளிக்கதிர் விமானத்தை நோக்கி அடிக்கப்பட்டது. விமானத்தை இயக்குவதில் இடையூறு ஏற்பட்டதால் விமானி, விமானத்தை மீண்டும் உயர பறக்க செய்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய காவல் நிலையம் மற்றும் விமான பாதுகாப்புத் துறையான பிசிஏஎஸ் எனப்படும், பீரோ ஆப் சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி அலுவலகம் ஆகியவற்றுக்கும் அவசரமாக, தகவல் தெரிவித்தனர். அந்த லேசர் லைட் ஒளி அடிப்பது, அடுத்த சில வினாடிகளில் நின்றுவிட்டதால், விமானி விமானத்தை பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 1.20 மணிக்கு தரையிறக்கினார். பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக கீழே இறங்கி சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, பரங்கிமலை மற்றும் கிண்டி காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து, அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, குறிப்பிட்ட அந்த நேரத்தில் லேசர் லைட் ஒளி எங்கிருந்து அடிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல் சென்னையில் தரையிறங்க வரும் விமானங்கள் மீது நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் லேசர் லைட் ஒளிகளை அடித்து, விமானங்கள் தரையிறங்குவதற்கு இடையூறுகளை சிலர் ஏற்படுத்திக் கொண்டு இருந்தனர்.

பின்னர், விமான நிலைய அதிகாரிகளும், போலீசாரும் எடுத்த கடும் நடவடிக்கைகளால், அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது நின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் போது, மீண்டும் லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் இது மூன்றாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here