மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்

0
50

மாநிலங்களுக்கு நிதியை வழங்கினால் மட்டும் போதாது, அந்த நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

மதுரையைச் சேர்ந்த் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேருந்து நிலையங்கள், சாலையோரங்களில் முதியோரை உறவினர்கள் தனியே விட்டுச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. முதியோரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து வந்து, அங்கேயே விட்டுச் செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு தனித்து விடப்படும் முதியோர், யாசகம் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற முதியோரைப் பாதுகாக்க மாவட்டங்களில் முதியோர் மையங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கைவிடப்பட்ட முதியவர்கள் பாதுகாக்கப்படும் வகையில், தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், “சமீபகாலமாக ஊரகப் பகுதிகளில் வயதானவர்களை குறிவைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. முதியோருக்காக அமைக்கப்பட்டுள்ள சில மையங்களிலும் படுக்கை, போர்வை, தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. முதியவர்களை பாதுகாப்பது அரசின் கடமை” என்றனர்.

மத்திய அரசு தரப்பில், “தேசிய முதியோர் மையங்களை அமைப்பதற்கான நிதியை மத்திய அரசு வழங்கும். மையங்களை அமைத்து, பராமரிப்பது மாநில அரசின் பணி” என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள், “நிதியை வழங்கினால் மட்டும் போதாது, அந்த நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியதும் மத்திய அரசு பணிதானே? சமூகத்தின் மூத்த குடிமக்களை ப்பாதுகாக்கும் வண்ணம் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, அவர்களை பாதுகாப்பது அரசுகளின் கடமை.

இதனால், இந்த வழக்கில் மத்திய சமூக நலத்துறை முதன்மைச் செயலர், தமிழக சமூக நலத் துறை முதன்மைச் செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. தமிழகத்தில் தேசிய முதியோர் மையங்கள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here