உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அதிக் அகமது. பிரபல ரவுடி கும்பல் தலைவரும் அரசியல்வாதியுமான இவரை ஒரு வழக்கில் கடந்த 2023 ஏப். 15-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
பிரயாக்ராஜில் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, செய்தியாளர்களாக நடித்து உடன் வந்த மூவர், அதிக் அகமது (60) மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃபை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிக் அகமதுவுக்கு 5 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவரது இளைய மகனான அபான் தனது நண்பர்களுடன் காரில் ஜான்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரர்கள் உமர் மற்றும் அலி ஆகியோரை சந்திக்க சென்றார். வழியில் பூஞ்ச் என்ற இடத்தில் சென்றபோது, அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்த அபான் அகமது மற்றும் அவரது நண்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிக் அகமதுவின் மற்றொரு மகனான அசத் அகமது, 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில், 2023 ஏப்ரலில் ஜான்சி அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
