மத்திய பாதுகாப்பு படையான சிஆர்பிஎப்பில் பெண்கள் நியமிக்கப்பட்டு 40 வருடங்கள் முடிவடைவதை முன்னிட்டு, பணியில் முக்கியப் பங்காற்றிய வீராங்கனைகள் கவுரவிக்கப்பட உள்ளனர். மத்திய பாதுகாப்பு படைகளில் பழமையானதாக இருப்பது மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்).
ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படையில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். பிறகு, முதன்முறையாக செப். 25, 1986-ல் தனிப்படைப் பிரிவு தொடங்கி சிஆர்பிஎப்பில் கமாண்டோக்களாக பெண்களும் பணியமர்த் தப்பட்டனர். பெண்கள் படை தொடங்கி வரும் செப்.25-ல் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதையொட்டி, சிஆர்பிஎப் நடத்தும் விழாவில் அதில் பணியாற்றிய வீராங்கனைகள் கவுரவிக்கப்பட உள்ளனர். சீருடை அணிந்து நாட்டின் பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்று வழிநடத்துவது மிகவும் கடினம். இதில், தீவிரவாதம் மற்றும் நக்சலிஸத்துக்கு எதிராக முன்னணியில் நிற்பதுடன், தேவைப்படும்போது நாட்டுக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்வதும் முக்கியமானது.
இதற்காக, கடந்த 40 ஆண்டுகளாக சிஆர்பிஎப் படையில் பெண் வீராங்கனைகளும் ஆண்களுக்கு இணையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிஆர்பிஎப் தகவலின்படி, இன்று நாடு முழுவதும் முக்கியமான பாதுகாப்புப் பகுதிகளில் 6 பெண் படைப்பிரிவுகள் பணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
