கேரள மாநிலம், திருப்புணித்துறா நகரில் உள்ள அரசு சமசுகிருதக் கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி ), அனைத்து முக்கிய பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம், பல ஆண்டுகளாக கல்லூரி மாணவர் சங்கத்தை நிர்வகித்து வந்த இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) முதல் முறையாக அனைத்து பதவிகளையும் இழந்துள்ளது. எஸ்எஃப்ஐ-யின் கோட்டையாகக் கருதப்பட்ட இந்தக் கல்லூரியில் ஏபிவிபி பெற்றுள்ள இந்த வெற்றி, கேரள மாணவர் அரசியலில் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
தலைவர் பதவிக்கு ஸ்நிக்தா எம். ஹரி, துணைத் தலைவராக ஆதித்யா டி.ஏ. பொதுச் செயலாளராக விக்னேஷ் பட் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.எஃப்.ஐ. தலைமையிலான முந்தைய மாணவர் சங்கங்கள் சம்ஸ்கிருத மொழியை மேம்படுத்தத் தவறியதாகவும், மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து கேள்விகள் இருப்பதாகவும் ஏபிவிபி குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே, திருப்புணித்துறா நகராட்சியையும் அண்மையில் பாஜக கைப்பற்றியிருந்தது. 45 ஆண்டுகளாக இடதுசாரிகள் வசம் இருந்த நகராட்சி பாஜக வசமான நிலையில், தற்போது கல்லூரி மாணவர் சங்கத்திலும் ஏபிவிபி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
