காவிரி நதி ரக் ஷண சமிதி அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயத் தேவைகளை சுட்டிக்காட்டி காவிரி நீரில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து 70 டிஎம்சி நீரை கர்நாடக மாநிலத்துக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,‘‘காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய வழிகாட்டுதல்களும் உள்ளன. எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது,’’ என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
