பிஹார் மாநிலம், ஜமுயில் 10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், முக்கிய குற்றவாளி நந்தன் யாதவ் காவலில் இருந்து தப்பி ஓடியபோது போலீஸார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
பிஹார் மாநிலம், ஜமுய் நகரில் கடந்த 19-ம் தேதி பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் சக மாணவர் ஒருவருடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியது. அந்தக் கும்பலில் இருந்த நந்தன் யாதவ், மாணவியைப் பிடித்து இழுத்துச் சென்றதுடன், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 சிறார்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு நந்தன் யாதவை போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது, காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
‘இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார். சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் வீடியோ அல்லது தகவல்களைப் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஜமுய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வஜீத்தயாள் எச்சரித்துள்ளார்.
