ஆந்திராவில் விநாயகருக்கு 4.50 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பல அடி உயர விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி முடிந்து ஒரு வாரம் கடந்தபோதும், சில இடங்களில் இன்னமும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படாமல் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஆந்திராவின் என்.டி.ஆர். மாவட்டம், நந்திகாமா வாசவி மார்க்கெட் பகுதியில் கணபதி உற்சவ கமிட்டியினர் 44-வது ஆண்டாக இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடினர்.
குறிப்பாக விநாயகர் சிலை பந்தல் 4.50 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இதேபோன்று தெலங்கானாவில் வாரங்கல் சிவாநகரில் வாசவி அறக்கட்டளையினர் சார்பில் விநாயகருக்கு 1.93 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த விநாயகரை காணவும் பக்தர்கள் திரண்டு வந்தனர்.
