பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 3 சகோதரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். இவர் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட அடியாலா சிறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரை சந்தி்க்க அனுமதி மறுப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இம்ரானை விடுதலை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி வலியுறுத்தி வருகிறது. இ்தை வலியுறுத்தி செப்டம்பர் 27-ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக பிடிஐ கட்சி அறிவித்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்றும், அதை அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்நிலையில், இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்து குரல் எழுப்பி வந்த அவரின் 3 சகோதரிகளான அலீமாகான், உஸ்மா கான் மற்றும் நோரீன் கான் ஆகியோரை லாகூர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளதாக பிடிஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “இம்ரான் கானின் 3 சகோதரிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் போலீஸார் கைது செய்து, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். பின்னர் குழந்தைகள் விடுவிக்கப்பட்ட நிலையில், 3 சகோதரிகளும் லாகூரின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டனர்” என்றார்.
