அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கினால் புதிய ஆயுதங்கள் மற்றும் போர் உத்திகளைப் பயன்படுத்துவோம் என ஈரான் ஐஆர்ஜிசி செய்தித் தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதல் தொடர்கிறது. இந்நிலையில், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி அல்-அலம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுடனான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நீண்டகால மோதலுக்கு ஐஆர்ஜிசி தயாராக இருக்கிறது.
அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கினால் தக்க பதிலடி தரப்படும். குறிப்பாக, இதுவரை பயன்படுத்தாத, ரகசியமாக வைத்துள்ள புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துவோம். மேலும் அமெரிக்காவுடனான எந்தவொரு புதிய மோதலும் முந்தையதைவிட முற்றிலும் மாறுபட்டதாக, புதிய போர் உத்திகளைக் கொண்டதாக இருக்கும். இந்த போர்த் திறன்கள் உலகையே ஆச்சரியப்படுத்தக்கூடும்.
இந்தப் போரில் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் தோல்வி வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அவமானகரமான தோல்வியாகும். ஆனால் அந்தத் தோல்வியை ஒப்புக்கொள்ளும் தைரியம் அமெரிக்காவுக்கு இல்லை.
அமெரிக்காவுக்கும் எங்கள் அமைப்புக்கும் இடையே அதிகாரப்பூர்வ அல்லது அதிகாரப்பூர்வமற்ற உறவுகள் எதுவும் இல்லை. அந்த நாட்டுடனான ராஜதந்திரத் தொடர்புகள் ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகார வரம்புக்குள் வரும். அதேநேரம் ஐஆர்ஜிசி ராணுவம் தயார் நிலையில் இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
