Home தேசிய செய்திகள் சாலையில் சிறுமி துன்புறுத்தல்: பிஹாரில் மூவர் கைதான நிலையில் எதிர்க்கட்சிகள் விமர்சனம்

சாலையில் சிறுமி துன்புறுத்தல்: பிஹாரில் மூவர் கைதான நிலையில் எதிர்க்கட்சிகள் விமர்சனம்

0

பிஹாரில் சாலையோரத்தில் சிறுமி ஒருவரும், அவரது நண்பரும் சில நபர்களால் துன்புறுத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இது அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க செய்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை அம்மாநிலத்தின் ஜமுய் நகரில் உள்ள ஜமுய்-லக்‌ஷிசராய் சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மூன்று பேரை கைது செய்துள்ளது காவல் துறை. இந்நிலையில், இந்த சம்பவத்தின் வீடியோ வெளியான நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியினர் எதிரெதிர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

“இந்த சம்பவத்தை காவல் துறை தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது நண்பரை அணுகினோம். அவர்கள் இருவரும் சம்பவத்தன்று பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது ஜமுய்-லக்‌ஷிசராய் சாலையில் அவர்களை ஆறு முதல் ஏழு பேர் வரையிலான கும்பல் ஒன்று வழிமறித்து துன்புறுத்தி உள்ளது. அதில் சிலர் முகமூடி அணிந்திருந்தனர். அது தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது” என்று காவல் துறை கண்காணிப்பாளர் விஷ்வாஜித் தயாள் தெரிவித்துள்ளார்.

இந்த செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிஹார் மாநில மகளிர் ஆணைய தலைவர் அப்சரா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக தாங்கள் இருப்போம் என்று அவர் கூறினார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் தாக்கு

“மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆனால், ஆளும் அரசோ நள்ளிரவில் கூட பெண்கள் பாதுகாப்பாக வீதிகளில் செல்ல முடியும் என சொல்லி வருகிறது. ஜமுய் நகரில் சிறுமி மீதான துன்புறுத்தல் இந்த அரசின் மீது படிந்துள்ள கறை. காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என ராஷ்டிரிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் சக்தி சிங் யாதவ் விமர்சித்தார்.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஹார் அமைச்சர் சுனில் குமார் மற்றும் பிஹார் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் குந்தல் குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

“இந்த சம்பவம் மிகவும் துயரமானது. இதை எண்ணி நாம் வெட்கப்பட வேண்டும். ஆனால், ஆளும் அரசு இது குறித்து எதுவும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து மதி இழந்து பேசுகிறது. அரசின் இத்தகைய மெத்தனம் மாநிலத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரிக்க செய்கிறது.

ஆளும் அரசு இந்த விவகாரத்தை மூடி மறைக்க பார்க்கிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்பது அறவே இல்லை. ரவுடிகளின் ராஜ்ஜியம் பிஹாரில் நடக்கிறது” என்று பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி விமர்சனம்

“பிஹார் சிறுமி துன்புறுத்தலுக்கு ஆளான அந்த வீடியோ மிகவும் வேதனை தருகிறது. மன்றாடி வேண்டிய அந்த சிறுமியை சில கொடூரர்கள் துன்புறுத்தி உள்ளனர். அவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? என்ன மாதிரியான கலாச்சாரம் இது? இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதில் நீதி உடனடி தேவையாக உள்ளது.

இந்த சம்பவம் கடந்த 19-ம் தேதி நடந்துள்ளது. இந்நிலையில், ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லை. இரவு 7 மணிக்கு கூட பிஹார் சாலைகள் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாததா? என்பது குறித்து ஆளும் அரசு பதில் தர வேண்டும்” என்று சமூக வலைதள பதிவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் எம்.பி பவன் கெரா, ஜனசக்தி ஜனதா தள தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் விமர்சித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version