நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர்ரயில் நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரின் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 2 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
நாக்பூர் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் நேற்று அதிகாலையில் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த 6-7 பயணிகளை மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் கான்கிரீட் சிலாப் மூலம் தாக்கினார். அவர்களின் அலறல் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். தப்பிக்க முயன்ற மன நோயாளியை சுற்றி வளைத்து பிடித்தனர்.
எனினும் இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த கணேஷ் குமார் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றொருவர் வீடற்ற நபர் என தெரியவந்துள்ளது.படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் 45 வயதுடைய கொலையாளி மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாக்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.