ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – பெங்களூரு எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு எஃப்சி அணி தனது கடைசி ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்கு எதிராக 2-2 என்ற கணக்கில் டிரா செய்திருந்தது. அதேவேளையில் சென்னையின் எஃப்சி தனது கடைசி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி மும்பையிடம் தோல்வி அடந்திருந்தது.
பெங்களூரு எஃப்சி அணி இந்த சீசனில் அற்புதமாக செயல்பட்டு வருகிறது. அந்த அணி 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 டிரா, 2 தோல்விகளுடன் 24 புள்ளிகள் குவித்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் சென்னையின் எஃப்சி அணி 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு அணி டிபன்ஸில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அணி இந்த சீசினில் 15 கோல்களை மட்டுமே வாங்கியுள்ளது.
மறுபுறம் சென்னையின் எஃப்சி அணி 19 கோல்களை வாங்கி உள்ள நிலையில் 17 கோல்களை அடித்துள்ளது. ஐஎஸ்எல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் பெங்களூரு எஃப்சி 8 போட்டிகளிலும், சென்னையின் எஃப்சி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. சொந்த மண்ணில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி வெற்றி பாதைக்கு திரும்புவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.