ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆர்சிபி அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் 19 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.
முதலில் பேட் செய்த லக்னோ அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் 56 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் விளாசினார். கேப்டன் ரிஷப் பந்த் 10 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார். டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 213 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணியால் 19 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக கேப்டன் ரஜத் பட்டிதார் 31 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், டிம் டேவிட் 17 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் சேர்த்தனர். முன்னதாக விராட் கோலி இரு பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் பிரின்ஸ் யாதவ் பந்தில் ஆஃப் ஸ்டெம்பு சிதற போல்டானார். இந்த பந்தை 140 கிலோ மீட்டர் வேகத்தில் பிரின்ஸ் யாதவ் வீசியிருந்தார்.கடந்த ஏப்ரல் 2023-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததற்கு பிறகு, ஐபிஎல் தொடரில் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது இதுவே முதல் முறையாகும்.
மற்றொரு தொடக்க வீரரான ஜேக்கப் பெத்தேல் 4 ரன்களில் ஷமி பந்தில் வெளியேறினார். தேவ்தத் படிக்கல் 34 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா ஒரு ரன்னிலும் பிரின்ஸ் யாதவ் பந்தில் நடையை கட்டினர். கிருணல் பாண்டியா, ரோமாரியா ஷெப்பர்டு ஆகியோர் களத்தில் இருந்த நிலையில் திக்வேஷ் ராதி வீசிய கடைசி ஓவரில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் ஆர்சிபி அணியால் 10 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. கிருணல் பாண்டியா 16 பந்துகளில், 28 ரன்களும் ரோமாரியோ ஷெப்பர்டு 15 பந்துகளில் 23 ரன்களும் சேர்த்தனர்.
லக்னோ அணி தரப்பில் பிரின்ஸ் யாதவ் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஷாபாஸ் அகமது 2 விக்கெட்களை கைப்பற்றினார். 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி தொடர்ச்சியாக அடைந்த 6 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தற்போதைய வெற்றியின் மூலம் லக்னோ அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் தொடர்கிறது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 3 வெற்றி, 7 தோல்விகளை பதிவு செய்துள்ளது.
போட்டிக்கு பின்னர் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரின்ஸ் யாதவ் கூறியதாவது: விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பான உணர்வை கொடுத்தது. ஆனால் நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய போதிலும் நாங்கள் தோல்வி அடைந்திருந்தால் அது மகிழ்ச்சியை கொடுத்திருக்காது. எந்த விதமாக இருந்தாலும் சரி, பந்துவீச்சாளர் விக்கெட்டை வீழ்த்தும்போது அது நல்ல உணர்வைத் தரும்.
அந்த விக்கெட்டை எடுத்தால் மட்டுமே எங்களால் போட்டியில் வெற்றி பெற முடியும் என்ற சூழல் இருந்தது; அது நிகழ்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். புதிய பந்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது குறித்து முகமது ஷமியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவரிடம் இருக்கும் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், ஒரு பந்துவீச்சாளர் பந்துவீசும்போது அவர் மிட்-ஆன் அல்லது மிட்-ஆஃப் திசையில் நிற்பார். அனுபவம் வாய்ந்த வீரர் உங்களுக்கு அருகில் நிற்கும்போது, அது நம்பிக்கையை கொடுக்கும்.
கிரிக்கெட்டில் வெற்றி தோல்விகள் சகஜம். ஆனால் எங்கள் அணி எங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்து வருகிறது. நாங்கள் பிளே-ஆஃப் சுற்று குறித்து அதிகம் யோசிக்காமல், ஒவ்வொரு போட்டியையும் தனித்தனியாக அணுகி விளையாடுவதைப் பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறோம். இவ்வாறு பிரின்ஸ் யாதவ் கூறினார். 24 வயதான பிரின்ஸ் யாதவ் நடப்பு ஐபிஎல் தொடரில் 16 விக்கெட்களை கைப்பற்றி அதிக விக்கெட்கள் வீழ்த்தி உள்ளவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். இந்த வகையில் புவனேஷ்வர் குமார் (ஆர்சிபி), அன்ஷுல் கம்போஜ் (சிஎஸ்கே) ஆகியோர் தலா 17 விக்கெட்களை வீழ்த்தி முதல் 2 இடங்களில் உள்ளனர்.















