கல்வியில் தமிழகம் பெற்றுள்ள வளர்ச்சியை பிற மாநிலங்கள் அடைய இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளாகும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்து, கல்லூரி கனவு-2025 எனும் வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து தமிழக அரசின் பயிற்சி பெற்று எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி மற்றும் வங்கி பணிகளுக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 58 மாணவர்களை பாராடி கேடயங்களை அவர் வழங்கினார்.
அதன்பின் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: இங்கே ‘2கே கிட்ஸ்’ இருக்கிறீர்கள். உங்களுக்கு அறிவுரை கூறினால் பிடிக்காது என்பது எனக்கு தெரியும். ஆனாாலும், படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை. இங்கே உள்ள மாணவர்கள் பலரின் தாத்தா-பாட்டிகள் பள்ளிக்கு சென்றிருக்கமாட்டார்கள்.
ஆனால், இன்று அந்த நிலைமை மாறி, இந்தியாவிலேயே அதிகம் பேர் உயர்கல்வி படிக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய தலைவர்கள் பெற்றுதந்த இடஒதுக்கீடு முக்கிய காரணம். அதனால்தான் கல்வி அனைவரிடமும் போய் சேர்ந்துள்ளது.
கல்வியை பொறுத்தவரை வட இந்தியாவில் இருக்கக்கூடிய நிலைமை வேறு. அங்கே இருக்கும் மக்களுக்கு அடிப்படை தேவைகளே பெரிய விஷயமாக இருக்கிறது. அங்கு தமிழகம் மாதிரி அனைத்து குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்கப்படுவதில்லை. அப்படி பள்ளிப்படிப்பை முடித்தாலும், கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் சதவீதம் நம்முடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது.
திராவிட இயக்கங்கள் காரணம்: தமிழகத்தின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 52 சதவீதமாகும். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 29 சதவீதம். நமது மாநிலத்தின் இந்த வளர்ச்சியை பிற மாநிலங்கள் அடைய இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளாகும். அந்த அளவுக்கு கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது. அதற்கு முழு காரணம் நமது திராவிட இயக்கங்களின் ஆட்சிகள்தான். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், ‘‘தமிழகத்தின் கதாநாயகர்கள் நீங்கள்தான். இன்னொருவரை தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. நீங்கள்தான் சாதிக்கக்கூடிய திறன் பெற்றவர்கள். கல்வி ஒரு சக்திவாய்ந்த கருவி.
நீங்கள் படித்தால், அது அப்படியே உங்களை தலைகீழாக மாற்றிவிடும். உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் மட்டும் உயர்ந்தால் போதாது. உயர்கல்வியில் தரமான கல்வியை வழங்குவதையும் இந்த அரசு உறுதி செய்கிறது’’என்றார். இந்நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.