பாதுகாப்பு கேட்டு நடிகை கவுதமி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நடிகை கவுதமி, தற்போது, அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் தனக்கு சொந்தமான ரூ.9 கோடி மதிப்புள்ள சொத்தை தன்னிடம் பணியாற்றிய அழகப்பன் மோசடி செய்து அபகரித்ததாகவும், சட்ட விரோதமாக அனுமதி பெற்று அங்கு கட்டிடம் கட்டி வருவதாகவும் காவல் துறையில் சமீபத்தில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், கட்டுமானம் நடைபெறும் இடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், தன்னை சிலர் மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கவுதமி புகார் கொடுத்துள்ளார். ‘வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் வாட்ஸ்அப் மூலம் என்னை சிலர் மிரட்டுகிறார்கள். நிலத்தில் உள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கூறி போஸ்டர் அனுப்பி மிரட்டுகின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.