குமரியின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அறிவியல் குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் வருகை இருக்கும். விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கடும் வெயில் காரணமாக திற்பரப்பு அருவியில் வரும் கோதை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைந்து குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் கொட்டி வந்தது.
இதனால் பயணிகள் குளிப்பதற்கு சிரமப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக சாரல் மழை மற்றும் கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறைவாக தண்ணீர் விழும் பெண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றும் பயணிகள் குளிப்பதற்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்கின்றனர்.