அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3-வது நாளாக சோதனை நடந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த ஏப்.7-ம் தேதி சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் 2-வது நாளாக நேற்று முன்தினமும் சோதனை நடந்தது.
இந்நிலையில், அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்காக ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மீண்டும், கே.என்.ரவிச்சந்திரனை ஆர்.ஏ.புரம் 3-வது குறுக்குத் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்று 3-வது நாளாக நேற்றும் சோதனை நடத்தினர்.
அதேபோல், ஆர்.ஏ.புரம் கிருஷ்ணாபுரி முதல் தெரு, பிஷப் கார்டனில் உள்ள அவரது நிறுவனம், அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், அவர் நடத்தும் நிறுவனத்தின் பங்குதாரரான தீபக் என்பவரை ரவிச்சந்திரன் வீட்டுக்கு அழைத்து வந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ரவிச்சந்திரனை மீண்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அதிகாரிகள் ஆஜராக அறிவுறுத்தினர். இதையடுத்து, மீண்டும் அவர் நேற்று ஆஜரானார். அவரிடம் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.