ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில், கே.விஜய் பாண்டி தயாரித்துள்ள படம், ‘வித்தைக்காரன்’. அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கியுள்ளார். யுவகார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் நாயகனாக நடிக்கும் இதில் சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், சுப்பிரமணிய சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 23 -ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி செய்தியாளர்களிடம் நடிகர் சதீஷ் கூறியதாவது:
விமான நிலையத்தில் சிக்கி இருக்கும் ரூ.25 கோடி மதிப்புள்ள வைரத்தை மூன்று குழு கைப்பற்றத் திட்டமிடுகிறது. அது யாரிடம் சிக்கியது என்பது கதை. இதில் 2 வேடங்களில் நடித்துள்ளேன். ஒரு கேரக்டர் மேஜிக்மேன். இதற்காக ஒருவரிடம் மேஜிக் கற்றேன். இன்னொரு கேரக்டர் என்ன என்பது சஸ்பென்ஸ். முக்கியமான காட்சிகள் விமான நிலையத்தில் நடக்கின்றன. அந்தக் காட்சிகள் சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் படமாக்கப்பட்டது. நடிகர் விஜய் தான் இந்தப் படத்தை துவங்கி வைத்தார். என்னைச் சமீபத்தில் சந்தித்த போது ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ பார்த்ததாகச் சொன்னார். அவர் பாராட்டியது மிகப்பெரிய சந்தோஷம். சிம்ரன் குப்தா தமிழே தெரியாமல், வசனங்களை மனப்பாடம் செய்து பேசினார். அனைவருக்கும் பிடிக்கும் விதமாக இந்தப் படம் இருக்கும்.
இவ்வாறு சதீஷ் கூறினார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.