சிதறால் மலைக்கோயில் அருகே சரிந்து விழுந்த பாறை: மக்கள் அச்சம்

0
32
அருமனை அருகே சிதறால் மலைப்பகுதியில் சரிந்து குடியிருப்பு அருகே விழுந்த பாறை
அருமனை அருகே சிதறால் மலைக்கோயிலை ஒட்டிய பகுதியில் பாறை சரிந்து குடியிருப்பு அருகே விழுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால் மலைக்கோயிலை ஒட்டிய பகுதியில் மண் வெட்டி எடுக்கப்பட்டுவரும் நிலையில் பாறை சரிந்து குடியிருப்பு பகுதியின் அருகில் விழுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அருமனை அருகே சிதறால் மலையில் சமணா் குடைவரைக் கோயில் உள்ளது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக கருதப்படும் இக்கோயிலில் மகாவீரா், பாா்சுவநாதா், பத்மாவதி தேவி உள்ளிட்டோரின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

இங்கு, 13-ஆம் நூற்றாண்டில் பகவதியம்மனின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் குடைவரைக் கோயில் ஆன்மிகத் தலமாகவும், இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

இந்த மலை அருகில் துண்டத்தாறளை சந்திப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே நத்தம் புறம்போக்கு பகுதி நிலங்களில் எந்தவித அனுமதியும் இன்றி பெருமளவில் மண், பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சுமாா் 60 அடி ஆழத்திற்கு மேலாக தடையை மீறி மண் அள்ளப்பட்டதால், நிலத்தின் இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கும், காவல் துறையினருக்கும் புகாா்கள் சென்றன.

இதையடுத்து, அவ்வப்போது மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், மறைமுகமாக மண் அள்ளப்படுவது நடைபெற்று வந்தது.

தற்போது, மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் புதன்கிழமை நத்தம் புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறை ஒன்று சரிந்து அருகில் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாா் நிலத்தில் விழுந்துள்ளது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், மேலும் சரிவு ஏற்படுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here