காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு விநாடிக்கு 8,000 கனஅடி நீரை திறக்க கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜூலை 31-ம் தேதிக்குள் தமிழகத்துக்கு 1 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11,500 கனஅடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இதுகுறித்து முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் சித்தராமையா கூட்டினார். நேற்று மாலை நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் நிறைவாக பேசிய முதல்வர், “கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் இந்த ஆண்டில் 28 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் 63 சதவீதம் மட்டுமே நிறைந்துள்ளன. ஆனாலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை நிராகரிக்க முடியாது. தினமும் வினாடிக்கு 11,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்ட நிலையில், நாங்கள் 8,000 கனஅடி நீரை திறக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.
இதற்கிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2,250 கனஅடி என தமிழகத்துக்கு வினாடிக்கு 22,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.