டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டுவோம் என்றும் இனி தமிழகத்தில் காவல் துறையை தூங்க விடமாட்டோம். டாஸ்மாக் விவகாரத்தில் முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின்தான் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில் டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினரை கைது செய்த போலீஸார், 10-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் அடைத்தனர். இந்நிலையில், மாலை 6 மணி கடந்தும் விடுவிக்காததால், போலீஸாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலிகிராமத்தில் பாஜக பெண் நிர்வாகி மயங்கி விழுந்த நிலையில் அவரை தமிழிசை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதேபோல், அண்ணாமலையும் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 7 மணிக்கு பிறகு பாஜகவினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பாலியல் வன்கொடுமை, கள்ளச்சாரயம், மணல் கடத்தல் குற்றவாளிகளை தமிழக அரசு ராஜமரியாதையுடன் நடத்துகிறது. ஆனால், ஊழலை தட்டிக் கேட்பவர்களை சித்திரவதை செய்கிறது. காவல் துறையினர் எங்களிடம் நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தை இனி தீவிரப்படுத்த போகிறோம். இனி எந்தவித முன்னறிவுப்புமின்றி, காவல் துறையிடம் அனுமதி பெறாமல்தான் பாஜக போராட்டங்களை நடத்தும்.
திமுகவின் ஏவல் துறையாக காவல்துறை மாறியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில், அடுத்த வாரம் பாஜக மகளிர் அணி சார்பில் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை ஓட்டும் போராட்டம் நடக்க இருக்கிறது. மார்ச் 22-ம் தேதி சென்னையில் மீண்டும் போராட்டம் நடக்கும். ஏப்ரல் முதல் வாரம் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூடும் போராட்டம் நடத்துவோம்.
முடிந்தால் காவல்துறை எங்களை தடுத்து பார்க்கட்டும். பாஜகவுக்கு மரியாதை கொடுக்காத வரை காவல்துறைக்கும் நாங்கள் இனி மரியாதை கொடுக்கப்போவதில்லை. தமிழகத்தில் இனி காவல்துறையை பாஜக தூங்கவிடாது. தினந்தோறும் போராட்டங்களை நடத்த இருக்கிறோம்.
அமைச்சர் ரகுபதி மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு உள்ளது. அவர் சட்டத்துறை அமைச்சராக இருக்க தகுதியற்றவர். முதல்வரை பற்றி நான் பேசியதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை. தைரியம் இருந்தால் அமைச்சர் ரகுபதி என்னை கைது செய்யட்டும். டாஸ்மாக் முறைகேட்டில் முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின் தான்.
தவெக ‘வொர்க் ப்ரம் ஹோம்’ அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மக்களின் பிரச்சினை எப்படி தெரியும். தவெக திமுகவின் இரண்டாவது அணி. திரைப்படத்தில் மது, புகைப்பிடித்து நடிக்கும் விஜய், டாஸ்மாக் முறைக்கேட்டை பற்றி பேச தகுதியற்றவர். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழிசை கூறும்போது, ‘மாலை 6 மணி கடந்தும் காவல்துறை வெளியேவிட மறுக்கிறார்கள். ஊழல் செய்தது நாங்களா, திமுகவா. வேண்டுமென்றே எங்களை திமுக கொடுமைப்படுத்துகிறது. பழிக்குப் பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இப்படி ஒரு அடக்குமுறை அராஜகத்தை நான் பார்த்ததில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது’ என்றார்.