புதுடெல்லி: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவதற்காக 24 மணி நேரத்தில் 1.55 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பெருநிறுவன விவகார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் 1.25 லட்சம் பேர் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,55,109 பேர் பிரதமரின் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். 21-24 வயது பிரிவினருக்கான இன்டர்ன்ஷிப் பயிற்சி டிசம்பர்2-ம் தேதி தொடங்க உள்ளது.இதில், தேர்வு செய்யப்படு பவருக்கு மாத உதவித் தொகையாக 12 மாதங்களுக்கு தலாரூ.5,000 வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் ஒரு முறை மானியமாக ரூ.6,000 வழங்கப்படும். இவ்வாறு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
80,000 இடங்கள்: எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, பயணம், விருந்தோம்பல், மோட்டார் வாகனம் உள்ளிட்ட 24 துறைகளில் 80,000-க்கும் அதிகமான இன்டர்ன்ஷிப் இடங்களுக்கு www.pminternship.mca.gov.in மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆதார் அடிப்படையில் வேலைவாய்ப்பு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதிவாய்ந்த படித்த இளைஞர்களுக்கு டாப் 500 நிறுவனங்களில் 12 மாதங்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக, முதல்கட்டமாக ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.