ஆயுதங்களுடன் ஊடுருவினாலோ, கொள்ளையில் ஈடுபட்டு தப்பினாலோ குற்றவாளியை சுற்றிவளைத்து கைது செய்வது எப்படி என சென்னையில் போலீஸார், முதன்முறையாக கொள்ளை தடுப்பு ஒத்திகையில் நேற்று ஈடுபட்டனர்.
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனால், குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் இரு தினங்களுக்கு முன்னர், போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொள்ளை தடுப்பு ஒத்திகை நடத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் காவல் மாவட்டம் அடங்கிய சென்னை கிழக்கு மண்டலத்தில் 19 இடங்களில் நேற்று கொள்ளை தடுப்பு ஒத்திகை மற்றும் வாகன சோதனையை போலீஸார் நடத்தினர்.
அதாவது போலீஸாரே கொள்ளையர்கள் மற்றும் குற்றவாளிகள்போல் வேடமிட்டு குற்றச் செயலில் ஈடுபட்டு தப்புவார்கள். இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, அங்கிருந்து காவல் நிலைய போலீஸாருக்கு எந்த இடத்திலிருந்து குற்றவாளி தப்பினார் என தகவல் தெரிவிக்கப்படும்.
களத்தில் உள்ள போலீஸார் குற்றவாளி வேடமிட்ட போலீஸார் எந்த வழித்தடத்தடம் வழியாக தப்ப வாய்ப்புள்ளது என பல்வேறு வழித்தடங்களை கண்டறிந்து, தப்பியவரை சரியாக கைது செய்ய வேண்டும். துப்பாக்கியோடு குற்றவாளி தப்பினால் போலீஸாரும், துப்பாக்கியுடன் செல்ல வேண்டும்.
இப்படி, மாறுவேடம் அணிந்து தப்பிய போலீஸாரை கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். சரியாக செயல்பட்டு, குற்றவாளிகளை பிடித்த போலீஸாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அடுத்தகட்டமாகவும் இதேபோல் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.